கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை உயர்வு
கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் தக்காளி, சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் தற்போது உருளைக்கிழங்கும் விலையும் அதிகரித்துள்ளது. கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பள்ளங்கி, வில்பட்டி, செண்பகனூர், பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்யப்படுகிறது, இங்கு விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு ருசி அதிகமாக இருக்கும் என்பதால் பல்வேறு தரப்பினரால் விரும்பி வாங்கப்படுகிறது.
தற்போது உருளைக்கிழங்கு அறுவடை பணியில் மலைக்கிராம விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மழை தொடர்ந்து பெய்ததால், விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. இதனால் சந்தைகளுக்கு உருளைக்கிழங்கு வரத்து குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.