மண் சாலையில் லாரிகள் ஏற்படுத்திய குழிகளால் போக்குவரத்து பாதிப்பு


மண் சாலையில் லாரிகள் ஏற்படுத்திய குழிகளால் போக்குவரத்து பாதிப்பு
x

முத்தனூர் பகுதியில் மண் சாலையில் லாரிகள் ஏற்படுத்திய குழிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூர்

தரமற்ற சாலை

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதத்திற்கும் மேலாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முத்தனூர் பகுதியில் வேலாயுதம்பாளையம் -நொய்யல் செல்லும் தார் சாலையின் குறுக்கே உபரி நீர் கால்வாய் மூலம் தண்ணீர் செல்லும் பகுதியில் இருந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் அதன் அருகிலேயே மற்றொரு புதிய பாலம் கட்டுவதற்காக குழி பறிக்கப்பட்டு வருகிறது.இதன் காரணமாக அனைத்து வாகனங்களும் சென்று வருவதற்காக அதன் அருகே மண் சாலை போடப்பட்டது. அந்த மண் சாலை தார் சாலையின் அடியில் பறிக்கப்பட்ட மிகவும் மோசமான தரமற்ற மண்களால் சாலை அமைக்கப்பட்டது.

மண்ணில் புதைந்த லாரிகள்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் குப்பம் பகுதியில் இருந்து நொய்யல் வழியாக வேலாயுதம்பாளையம் நோக்கி இந்த சாலையில் செயற்கை மணல் ஏற்றி வந்த லாரி மண்சாலையில் சென்றபோது திடீரென குழி ஏற்பட்டு லாரி அங்கிருந்து செல்ல முடியாமல் நின்றது. அதேபோல் பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து கொடுமுடி நோக்கி கோழிகளை ஏற்றி வந்த லாரியும் மண் போட்டிருந்த இடத்தில் திடீரென புதைந்து விட்டது. இருபுறமும் 2 லாரிகள் நின்று விட்டன. உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளை தள்ளியபோது செயற்கை மணலுடன் இருந்த லாரி மேலும் கீழே இறங்கியது. லாரி அந்த இடத்தில் இருந்து நகரவில்லை. இதனால் எந்த வாகனங்களும் இந்த வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

பாதிப்பு

இதனால் கொடுமுடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் நொய்யல் குறுக்குச்சாலையில் இருந்து புன்னம்சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதேபோல் சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம் சத்திரம் சென்று நொய்யல் குறுக்குச்சாலை வழியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நேற்று பகல் 12 மணி வரை சுமார் 17 மணி நேரம் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்திற்கு அனுமதி

நேற்று பகல் சுமார் 12 மணிக்கு மேல் லாரிகளில் செயற்கை மணல் கடந்த ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டி நிரவி சீரமைத்து அதன் பிறகு 2 லாரிகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு பின்னர் எந்திரம் மூலம் லாரிகளை தள்ளி குழி இருந்த பகுதியில் இருந்து வெளியேற்றினார்கள். பின்னர் அந்த 2 லாரிகளும் சென்ற பிறகு அந்த வழியாக போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

2 பகுதியில் இருந்தும் வந்த அனைத்து வாகனங்களும் வெகுதூரம் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் மிகவும் காலதாமதமாக வாகனங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றன.


Next Story