மண்பானை, அடுப்பு தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்


மண்பானை, அடுப்பு தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்
x

மண்பானை, அடுப்பு தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்

திருவாரூர்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை, அடுப்பு தயாரிப்பு பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மண்பாண்ட பொருட்கள்

மண்பாண்டங்களில் சமைத்த உணவுக்கு தனி ருசியும், மனமும் என்றும் உண்டு. இதனால் கிராமப்புற மக்கள் மட்டுமின்றி நகர்புற மக்களும் விரும்பி மண்பாண்ட பொருட்களில் சமையல் செய்து வந்தனர். மண்பாண்டங்களில் சமைத்த உணவுகளை உண்டு தான் நமது முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். அதனால் அந்த காலம் இந்த காலம் வரை மண்பாண்ட பொருட்கள் பயன்பாடு இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த மண்பாண்ட பொருட்களில் சமைத்த உணவும் எளிதில் கெட்டு போகாது.

மண்பாண்ட தயாரிப்பு என்பதே தனி சிறப்பு உண்டு. அதன்படி களி மண்ணை தோண்டி எடுத்து, அதனுடன் வண்டல் மண்ணையும் சேர்த்து ஊர வைத்து, அதில் எந்தவித தூசியின்றி சுத்தம் செய்து பக்குமான நிலைக்கு கொண்டு வந்து, அதன்பின்னர் சிறிய சக்கரம் என்னும் திருவையில் வைத்து, மிக நேர்த்தியாக சிலை வடிவைக்கும் சிற்பியை போல், கவனத்துடன் மண்பாண்ட பொருட்களை வடிவமைத்து உருவாக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் கைவண்ணம் என்பது தனி சிறப்புமிக்கது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதில் தண்ணீர் பானைகளில் தொடங்கி பொங்கல் பானை முதல் பலவித மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எளிதாக உடையும் தன்மை உடைய மண்பாண்ட பொருட்களுக்கு மாற்றாக இரும்பு, பித்தளை, எவர்சில்வர் பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனால் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு என்பது நாளடைவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தொழில் நலிவடைந்து வருவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அடுத்தமாதம்(ஜனவரி) 15-ந்தேதி பொங்கல் பண்டிகை, 16-ந்தேதி மாட்டு பொங்கல் கொண்டாப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வயல்களில் புதுமண்பானையில் பச்சை அரிசி, வெல்லத்தில் சர்க்கரை பொங்கலிட்டு, இயற்கை அன்னையை வணங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

புதுப்பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடுவது நகர்புற மக்களின் இடையே குறைந்து விட்டது. இன்றைய அளவிலும் கிராமப்புறங்களில் மட்டுமே மண்பானைகளில் பொங்கலிட்டு கொண்டாடி வருகின்றனர். மண்பாண்ட பொருட்களினால் சமைக்கின்ற உணவு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும் என்பதால் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு நீடித்து வருகிறது. இதில் நகர்புறங்களில் மண்பாண்டங்களை பயன்படுத்துவதை கவுரவ குறைவாக நினைக்கின்றனர்.

மண்பானை, அடுப்பு தயாரிக்கும் பணி தீவிரம்

திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருப்பதால் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். பண்டிகைக்காக மண்பானை, அடுப்பு உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் திருவாரூர் அருகே திருக்காரவாசல், கிடாரங்கொண்டான், அலிவலம், சித்தநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 25 நாட்களே இருப்பதால் மண்பானை, அடுப்பு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் கூறியதாவது:-

தமிழர்கள் கலாச்சாரம் இயற்கை சார்ந்தது. இதனால் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு என்பது அதிகமாக இருந்து வந்தது. எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டாலும் மண்பாண்ட பொருட்களுக்கு என்று தனி இடமுண்டு. ஆனால் நாகரிக வளர்ச்சி போன்ற பல காரணங்களால் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு என்பது குறைந்து வருகிறது. இதில் எவர்சில்வர், நான்ஸ்டிக் போன்ற பொருட்களினால் இன்றைய வீடுகளில் சமையல் அறையில் இருந்து மண்பாண்ட பொருட்கள் ஓரம் கட்டப்பட்டன.

குறைந்த வட்டியில் கடன் உதவி

மண்பாண்ட தொழில் செய்பவர்கள் வாழ்க்கை தான் இன்னும் மாற்றம் அடையாமல் உள்ளது. பரம்பரை பரம்பரையாக மண்பாண்ட தொழிலில் ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், பரம்பரை தொழிலை கைவிட மனமில்லாமல் இன்றும் மண்பாண்ட பொருட்களை தயாரித்து வருகிறோம். இதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் மன மகிழ்ச்சி, மன நிறைவுக்காக தொழிலை விடாமல் செய்து வருகிறோம்.

ஆண்டிற்கு மிக பெரிய வருமானம் என்பது பொங்கல் பண்டிகை தான். சுமார் 4 ஆயிரம் பானைகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் மண் எடுப்பதில் சிக்கல் உள்ளது. அதற்கான அனுமதியினை மண்டபாண்ட தொழிலாளர்களுக்கு எளிமையாக்கிட வேண்டும். மழை கால நிவாரணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கிட வேண்டும். அப்போது தான் நலிவுற்று வரும் மண்பாண்ட தொழில் பாதுகாக்கப்படும் என்றார்.


Next Story