பொங்கல் பரிசு தொகுப்பில் பானை, அடுப்பு வழங்கக்கோரிமண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை, அடுப்பு வழங்கக்கோரி விழுப்புரத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் சார்பில் அரசின் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜி தலைமை தாங்கினார். செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். பொருளாளர் அய்யனார் வரவேற்றார். மாநில இளைஞரணி தலைவர் பழனி, மாநில துணைத்தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
கோரிக்கைகள்
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் புதிய மண்பானையும், மண் அடுப்பும் வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், இலவச மின்விசை சக்கரம் வழங்க வேண்டும், களிமண் எடுப்பதற்கான ஆணையும், தொழில்கடனையும் வழங்க வேண்டும், இலவச தொழிற்கூடங்கள் அமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஏழுமலை, மாநில துணைத்தலைவர் குமார், மாவட்ட துணைத்தலைவர் ஏழுமலை, நிர்வாகிகள் திருநாவுக்கரசு, செல்வம், சண்முகம், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை செய்தவாறே கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.