மண்பாண்ட தொழிலாளர்கள் குளங்களில் மண் அள்ள விரைவில் அனுமதி-சபாநாயகர் அப்பாவு பேச்சு


மண்பாண்ட தொழிலாளர்கள் குளங்களில் மண் அள்ள விரைவில் அனுமதி-சபாநாயகர் அப்பாவு பேச்சு
x

மண்பாண்ட தொழிலாளர்கள் குளங்களில் மண் அள்ளுவதற்கு விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்

திருநெல்வேலி

நெல்லை:

மண்பாண்ட தொழிலாளர்கள் குளங்களில் மண் அள்ளுவதற்கு விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல், தள ஓடு உற்பத்தி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் தங்களது தொழிலுக்கு தேவையான மண் எடுப்பதில் உள்ள பிரச்சினை குறித்து சபாநாயகர் அப்பாவுவிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து அவர், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல், தள ஓடு தயாரிப்பாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப் முன்னிலை வகித்தார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குளங்களில் மண் அள்ள...

முன்பு நான் விவசாயமும், செங்கல்சூளை தொழிலும் செய்து வந்தேன். எனவே அனைத்து தொழிலாளர்களின் சிரமங்களையும் உணர்ந்துள்ளேன். செங்கல்சூளைக்கு தேவையான மண்ணை எடுப்பதற்கு கடந்த 2011-ம் ஆண்டு வரையிலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

அதன் பிறகு தனி நபரிடம் மண் வாங்கவேண்டும் என்ற நிலை வந்ததால்தான் குளத்தில் மண் எடுப்பதில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

உரிய நடவடிக்கை

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மண் எடுப்பதால், அதில் அதிகளவு தண்ணீரை தேக்க முடியும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே குளங்களில் மண் எடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்சூளை, மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண்ணை குளங்களில் எடுப்பதற்கு விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கனிமவளத்துறை அலுவலர்கள் மூலம் செங்கல்சூளை தொழிலுக்கு லைசன்ஸ் ஒரு வாரத்திற்குள் பெற்றுத்தரப்படும். தொழில் வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மாவட்டத்திலுள்ள குளங்களில் மண் பரிசோதனை செய்து, மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு அலுவலர்கள்

கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசுகையில், ''மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை தொழிலாளர்கள் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு எந்தந்த குளங்களில் மண் எடுக்கலாம் என்று தகவல் தெரிவித்தால், அந்த குளங்களில் ஆய்வுசெய்ய கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து, அங்கு ஆய்வு நடத்தி மண் அள்ள அனுமதி வழங்கப்படும்.

கோர்ட்டு உத்தரவுபடி மண்பரிசோதனை செய்த பிறகுதான் அனுமதி அளிக்கப்படும். விதிமீறல் இல்லாமல் மண் அள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா நிலங்களில் மண் எடுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்றார்.

உரிமம் வழங்கப்படாமல்...

கூட்டத்தில் நெல்லை, தென்காசி மாவட்ட சேம்பர் பிரிக்ஸ் நாட்டு செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் ரமேஷ் பேசுகையில், ''எங்கள் தொழிலுக்கு உரிமம் கேட்டு நாங்கள் மனு செய்தும், பணம் கட்டியும் இதுவரை உரிமம் வழங்கப்படவில்லை. ஏற்கனவே நாங்கள் அள்ளிய மண்ணை வைத்துதான் தொழில் செய்து வருகிறோம். மண் இல்லாமல் தொழில் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களை நம்பி உள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேம்பர் வைத்திருப்பவர்கள் வருமான வரி, சரக்கு சேவை வரி, வணிகவரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். எங்களுக்கு அரசு உடனே லைசென்ஸ் வழங்கி மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்'' என்றார்.

மண்பாண்ட தொழிலாளர்களின் சிரமங்களை முருகானந்த வேளாளர் கண்ணீர்மல்க தேம்பி அழுதவாறு உருக்கமுடன் கூறினார்.


Next Story