நடுரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
சோளங்காபாளையம் எடக்காடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி நடுரோட்டில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
சோளங்காபாளையம் அருகே உள்ள எடக்காடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் அது மூடப்பட்டு விட்டது. இந்த ஆண்டு எடக்காடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் எடக்காடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று ஊஞ்சலூர் அருேக உள்ள சோளங்காபாளையம் நால் ேராடு பகுதிக்கு விவசாயிகள் ஒன்று திரண்டு டிராக்டரில் வந்தனர். பின்னர் அவர்கள் டிராக்டரில் கொண்டு வந்த நெல்லை அங்கு ஈரோடு- கரூர் மெயின் ரோட்டில் கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், கொடுமுடி மண்டல துணை தாசில்தார் பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறுகையில், 'எடக்காடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், 'வருகிற 15-ந் தேதி எடக்காடு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது