பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மனு


பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 5 July 2023 2:30 AM IST (Updated: 5 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்தநிலையில் திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தின் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள், ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பும் வகையில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பொதுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் இயற்கை பேரிடரின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் மின்வாரியத்தில் களப்பணி பிரிவில் மட்டும் 23 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலைசெய்யும் ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story