40 அடிக்கு சேறும்- சகதியுமாக இருப்பதால் மின் உற்பத்தியில் சிக்கல்:குந்தா அணையை தூர்வார ரூ.20 கோடியில் புதிய திட்டம்-அதிகாரிகள் தகவல்
40 அடிக்கு சேறும்- சகதியாக இருப்பதால் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், குந்தா அணையை ரூ.20 கோடி செலவில் தூர்வார புதிதாக திட்டமிடப்பட்டு உள்ளது.
ஊட்டி
40 அடிக்கு சேறும்- சகதியாக இருப்பதால் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால், குந்தா அணையை ரூ.20 கோடி செலவில் தூர்வார புதிதாக திட்டமிடப்பட்டு உள்ளது.
குந்தா அணை
நீலகிரி மாவட்டம் குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை 1961-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். இது 89 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் கெத்தை, பரளி, பில்லூர் மின் நிலையங்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி 515 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணைக்கு தண்ணீர் வரும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் உள்ளன. பருவ மழை காலங்களில் அந்த வழியாக அடித்து வரப்படும் சேறு, சகதி, மரத்துண்டுகள், தாவரங்கள் உள்ளிட்ட கழிவுகள் அணையில் வந்து சேகரமாகிறது.
60 ஆண்டு காலமாக
இந்தநிலையில் அணை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து சுமார் 60 ஆண்டு காலமாக தூர்வாரப்படாததால் அணையின் மொத்த நீர்மட்ட உயரத்தில் சுமார் 40 அடி தூரம் சேரும்- சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சுமார் 5 டன் அளவுக்கு விறகுகள் மட்டும் உள்ளே இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ராட்சத குழாய்கள் மூலம் மற்ற அணைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யும் போது, வழக்கமான மின் உற்பத்தி செய்ய முடியாமல் தொய்வு ஏற்படுகிறது.
இதனால் அணையை தூர்வாரி புதுப்பிக்க கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் உலக வங்கி மூலம் ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
சிக்கல்
அணையை தூர்வாரி அணை கழிவுகளை, அணையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள குந்தா மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கொட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் குறிப்பிட்ட பகுதி சதுப்பு நில காடுகளுக்குள் வருவதால் அங்கு சேறு, மற்றும் கழிவுகளை கொட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒதுக்கப்பட்ட பணம் மீண்டும் உலக வங்கிக்கே திரும்பியது.
எனவே தற்போது புதிய முறையில் கழிவுகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக குந்தா மின்வாரியத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ரூ.20 கோடி
பொக்லைன் மற்றும் கிரேன் வாகனங்கள் மூலம் அணையில் இருந்து கழிவுகளை அகற்றி கனரக வாகனங்களை கொண்டு அருகில் உள்ள மின்வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கொட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சதுப்புநில காடுகள் உள்ள அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ரூ.6 கோடி வரை செலவாகும். மேலும் கனரக வாகனங்கள் மூலம் சேறு -சகதி கொண்டு செல்லப்படுவதால் சாலை சேதமாகும் என்பதால் நெடுஞ்சாலை துறைக்கும் ரூ.5 கோடி வரை பணம் ஒதுக்க வேண்டி இருந்தது.
எனவே அந்த திட்டத்தில் மாற்றம் செய்து, தற்போது செலவுகளை குறைக்கும் வகையில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி அணையில் உள்ள கழிவுகளை, நேரடியாக அணையில் இருந்து உறிஞ்சி, உபரி நீர் வெளியேறும் பகுதி வழியாக கடத்தப்படும். இதற்கு ரூ.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு மத்திய நீர்வள ஆணையம் மூலமாக உலக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், டெண்டர் விடப்பட்டு அடுத்த 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.