அமித்ஷா நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின் தடை எதிர்பாராதது -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
அமித்ஷா நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மின் தடை எதிர்பாராத நிகழ்வு என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோவை,
மின்கட்டண உயர்வை பொருத்தவரை தமிழக அரசு மிக தெளிவான விளக்கம் கொடுத்து விட்டது. அதன்படி வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. மேலும் விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் மட்டுமே சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த மாற்றத்தையும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மாற்றம் செய்துள்ளது.
மின்தடை இல்லை
மின்வெட்டு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். நான் கேட்கிறேன் அவரது வீட்டில் மின் தடை ஏற்பட்டதா? அல்லது அவரது தோட்டத்தில் மின் தடை ஏற்பட்டதா?.
தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை. சீராக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தானும் இருக்கிறேன் என்பதை காட்டி கொள்வதற்காகவே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
அரசியலுக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழகத்தில் மின்தடை உள்ளது என குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை என்பது எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.
எனவே எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது.
பா.ம.க தலைவர் அன்புமணி, மது விற்பனையில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். தமிழகத்தில் ஆண்டிற்கே ரூ.45 ஆயிரம் கோடிக்கு தான் மது விற்பனை நடக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்?
வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சோதனை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கொடுத்துள்ளனர். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் அவர்கள் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.