வாழை இலை விலை உயர்வு


வாழை இலை விலை உயர்வு
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் வாழை இலை விலை உயர்ந்து ரூ.3-லிருந்து ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

நாகப்பட்டினம்


நாகையில் வாழை இலை விலை உயர்ந்து ரூ.3-லிருந்து ரூ.10-க்கு விற்கப்படுகிறது.

பாரம்பரியத்தோடு தொடர்புடையது

பழங்காலத்தில் இருந்தே நமது பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது வாழை இலை. விருந்து, விழாக்கள், திருமணம், சுக-துக்க நிகழ்வுகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இது மரியாதையின் வெளிப்பாடாகவும், சுகாதாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.

இன்றும் அனேக ஓட்டல்களில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுகிறது. இலையில் வைத்து கட்டி தரப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகம். நாம் வளர்க்கும் ஆடு, மாடு உள்பட கால்நடைகள் வாழை இலையை உணவாக உண்டு பசியாறும். எஞ்சியவற்றை பூமி எளிதாக மக்கச்செய்துவிடும்.

பிளாஸ்டிக் தட்டுகள்

கால மாற்றத்தால் வாழை இலைகள் பயன்பாடு குறைந்து பிளாஸ்டிக் தட்டு, பேப்பர் இலை போன்றவற்றின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பிளாஸ்டிக் தட்டுகளின் தீமையை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். அதனால் வாழை இலை மற்றும் வாழை மட்டையால் செய்யப்படும் தட்டுகள், கிண்ணங்களின் பயன்பாடு பெருகி வருகிறது.

இவை சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வாழை இலை சுப முகூர்த்த நாட்களில் விலை உச்சம் தொடும். அந்த வகையில் நாகையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளுக்கு திருவையாறு, கும்பகோணம் பகுதியில் இருந்து விற்பனைக்காக வாழை இலைகள் கொண்டுவரப்படுகிறது.

விலை உயர்வு

நாகையில் சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாத நிலையில் கடந்த ஆடி மாதத்தில் ரூ.2-க்கு விற்ற சாப்பாட்டு இலை விலை உயர்ந்து தற்போது ரூ.6-க்கும், ரூ.3-க்கு விற்ற தலைவாழை இலை தற்போது ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தின் காரணமாக ஓட்டல் கடைக்காரர்கள் வாழை இலையை வாங்குவதற்கு சற்று சுணக்கம் காட்டி வருகின்றனர்.


Next Story