ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்
சீர்காழி அருகே மேலநாங்கூர் பகுதியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
சீர்காழி அருகே மேலநாங்கூர் பகுதியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பங்கள்
சீர்காழி அருகே நாங்கூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேலநாங்கூர் பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைதுள்ளன. இந்த மின்கம்பங்களின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பொதுமக்கள் அச்சம்
பலத்த காற்று வீசினால் சேதமடைந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் செம்பதன் இருப்பு கடை தெருவில் இருந்து மேல் நாங்கூர் வழியாக நாங்கூர், திருமேனி கூடம், மங்கை மரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் பொதுமக்கள் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர்.
புதிதாக அமைக்க வேண்டும்
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை வேண்டும் என என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கை என்றனர்.