மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் மின் சிக்கன வார விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதனை முன்னிட்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம், மேற்பார்வை பொறியாளர் அம்பிகா அறிவுரையின்பேரில் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலம் பாலக்கரை ரவுண்டானா வரை சென்று மீண்டும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது. இதில் உதவி கோட்ட செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள், மின் சிக்கன விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.