துறையூரில் காய்கறி மார்க்கெட்டில் மின் இணைப்பு துண்டிப்பு


துறையூரில் காய்கறி மார்க்கெட்டில் மின் இணைப்பு துண்டிப்பு
x

துறையூரில் காய்கறி மார்க்கெட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது

திருச்சி

துறையூர், ஜூலை.5-

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட சாமிநாதன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சுமார் 45 தரைக்கடைகள் உள்ளன. இங்கு வியாபாரம் செய்யும் தரைக்கடை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியில் இருந்து மேற்கூரை அமைத்து, மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது. தரைக்கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் தினமும் கடை ஒன்றுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்து வசூலித்து வந்தனர். இருப்பினும் 2 முறை உரிய காலத்தில் மின் கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் செலுத்தாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தரைக்கடை வியாபாரிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் மீண்டும் நகராட்சி நிர்வாகம் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் நேற்று காலை மார்க்கெட்டில் உள்ள மின் இணைப்பை மின்வாரிய பணியாளர்கள் துண்டித்தனர். இதனால் மாலை நேரத்தில் இருள் சூழும் முன்பாகவே கடையை மூடிவிட்டு செல்லும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும் தங்களின் காய்கறிகளை விற்பதற்காக பெரும்பாலான வியாபாரிகள் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் வியாபாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விஷஜந்துக்கள் இப்பகுதியில் உலவுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். மார்க்கெட்டில் குடிநீர் வசதி இருந்தும் முறையாக நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story