விருத்தாசலத்தில் 47 விவசாயிகளுக்கு பவர் டில்லர் அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்
விருத்தாசலத்தில் 47 விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரங்களை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகள் 47 பேருக்கு பவர் டில்லர் வழங்கும் விழா நடந்தது. இதற்கு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைவாணி தலைமை தாங்கினார். விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், நகரமன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றியக்குழு தலைவர் மலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு 47 விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது விவசாயத்துக்காக 1 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளார்.
மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார் என்றார். விழாவில் உதவி செயற்பொறியாளர் ஞானமூர்த்தி, உதவிப்பொறியாளர்கள் வீரசுப்பிரமணியன், அஜிதா, இளநிலைப் பொறியாளர்கள் ராஜகோபால், ஜெயக்குமார், சிவசுப்பிரமணியன், விருத்தாசலம் நகர தி.மு.க. செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் கனக.கோவிந்தசாமி, வேல்முருகன், கோட்டேரி சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம.மணிவேல், துணை அமைப்பாளர் பட்டி வசந்தகுமார், அரசு வக்கீல் செந்தில்குமார், நகர காங்கிரஸ் தலைவர் ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.