நெல்லையில் விவசாயிகளுக்கு ரூ.64 லட்சத்தில் பவர் டில்லர்-சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
நெல்லையில் நடைபெற்ற விழாவில் விவசாயிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
நெல்லையில் நடைபெற்ற விழாவில் விவசாயிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பில் பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
விவசாயிகளுக்கு பவர் டில்லர்
வேளாண்மை தொழிலில் தற்போது நிலவிவரும் விவசாய பணியாளர்களின் பற்றாக்குறையை போக்கி வேளாண்மை பணிகளை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்கு ஏதுவாக பண்ணை எந்திரம் ஆக்குதல் திட்டம் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
சபாநாயகர் வழங்கினார்
இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் வேளாண்மை துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 77 விவசாயிகளுக்கு ரூ.64 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறார். விவசாய கடன் தள்ளுபடி, தற்போது வரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு பவர் டில்லர் வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 77 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர்டில்லர் கொடுக்கப்பட்டுள்ளது.
கமிட்டி
இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டபடி இந்திய பாராளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவையில் 3-ல் 2 பங்கு எம்.பி.ஆதரவும் இருந்து அதன்படி மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு கொண்டு செல்ல வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே 2016-ம் ஆண்டு சுதர்சன நாச்சியப்பன் கமிட்டி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் அமைப்புகள், அரசியல் தலைவர்களை சந்தித்து இதுகுறித்து விதிமுறைகளை தெளிவாக கூறியுள்ளது.
2018-ல் சட்ட ஆணையமும் அமைக்கப்பட்டு இதுதொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தி விட்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
சாத்தியமற்றது
ஆனால் திடீரென ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வராத நிலை, உறுப்பினர்களை வெளியேற செய்தல், எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்யும் போது ஆகிய நிலையில் இதனை பயன்படுத்தி இதுதொடர்பான சட்ட மசோதாவை அவர்கள் நிறைவேற்றலாம். ஆனால் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கொண்டு வருவதற்கு சாத்தியம் இல்லை என்று நம்புகிறேன்.
தமிழக கவர்னர், சனாதன கொள்கையால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என தெரிவித்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்க பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.