அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா பயிற்சி உதவுகிறது
அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா பயிற்சி உதவுகிறது என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
உலக யோகா தினம்
ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி பகுதிகளில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் யோகா பயிற்சி நடைபெற்றது. ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் 1,200 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளி அமிர்த சர்வோர் ஏரியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்பு மற்றும் சாராயம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
அமைதியான வாழ்க்கைக்கு
யோகா என்பது நீண்ட காலமாக செய்து வந்த உடற்பயிற்சி, அதை நீண்ட காலமாக நாம் கைவிட்டு விட்டோம். யோகாவின் மூலமாக சீரான சுவாசம் நம் உடம்பிற்கு கிடைக்கின்றது, யோகா பயிற்சியின் மூலமாக சித்தர்கள் சுவாசத்தை கட்டுப்படுத்துகின்ற முறையை கையாண்டிருக்கின்றார்கள். யோகா பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. மனதை ஒரு முகப்படுத்துகின்றது. உடலில் உள்ள சுரப்பிகளை சீராக செயல்பட வைக்கிறது.
நாம் சந்தோஷமான, அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த யோகா பயிற்சி மிகவும் உதவுகிறது. இப்படிப்பட்ட யோகா பயிற்சியை சிறுவயதில் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்கின்ற பொழுது நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்கும். மேலும் உணவு பழக்கவழக்கங்களில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். சிறுதானிய உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மரச்செக்கினால் தயாரிக்கும் எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதிஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், நகராட்சி ஆணையர் பழனி, சித்த மருத்துவ அலுவலர் விக்ரம்குமார், யோகா ஆசிரியர் சசிகலா, யோகா பயிற்றுனர்கள் சிவகுமார், ராஜேஸ்வரி, நகர மன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆலங்காயம்
ஆலங்காயம் அரசு சுகாதார நிலையத்தில் சர்வதேச யோகா தினம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.
யோகா பயிற்சியாளர் வெங்கடாசலம் மற்றும் ஆறுமுகம் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தனர். மேலும் தினமும் யோகா செய்வதினால் உடலையும், மனதையும் முறையாக வைத்துக் கொள்ள உதவும் என அதன் நன்மைகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதார பணியாளர்கள், புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.