சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமான் சிலையை பக்தர்கள் தூக்கிக்கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் திருமழபாடி, கண்டிராதித்தம், இலந்தைகூடம், செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாடி மேட்டூர், விளாகம், அரண்மனைகுறிச்சி, பாளயபாடி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து சாமி தரிசனம் பெற மக்கள் வந்திருந்தனர். இதேபோல் கீழப்பழுவூர், ஆலந்துறையார் சிவன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.