சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலூர்,
சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திெபருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கரலிங்க சுவாமி
மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம் சுவாமி சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் சித்திரை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் முற்றிலுமாக விடுபடவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமியும் நந்திபெருமானும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாலிங்கசுவாமி
பாலமேட்டில் சித்திரை மாத பிரதோஷ பூஜைகள் அங்குள்ள பொது மகாலிங்க சுவாமி ஜீவ சமாதி கோவிலில் நேற்று நடந்தது. இதில் சுவாமிக்கு, பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், வில்வ இலை உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், மற்றும் பூமாலைகள் அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதை போல அலங்காநல்லூர், காஞ்சரம் பேட்டை, பாறைபட்டி, சிவன் கோவில்களிலும் பிரதோஷ பூஜைகள் நடந்தது. பிரதோஷத்தையொட்டி நேற்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.