சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சதுரகிரி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த திரளான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.

காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்ப ஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதேபோல ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள் புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லம் கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருச்சுழி

திருச்சுழி திருமேனிநாதர்கோவில், பாறை குளம் வெள்ளியம்பலநாதர் கோவில்களில் நடைெபற்ற சிறப்பு வழிபாட்டில் பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story