தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் விழா
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்களால் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி பாத்திமா அன்னை திருத்தல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயேசுவின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
வாழ்த்துக்கள் பரிமாற்றம்
தொடர்ந்து, தேவாலயத்தில் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது. சிறப்பு பிரார்த்தனையின் முடிவில் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் தேவாலயங்கள் மற்றும் சி.எஸ்.ஐ., ஆர்.சி. உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து அவர்கள் நண்பர்களுக்கு பரிசுகள் மற்றும் கேக் வழங்கினர்.
பிரார்த்தனை
இதேபோல ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை மற்றும் மாவட்டம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.