பள்ளி வாசலில் தொழுகை நடத்துவது தற்காலிகமாக நிறுத்தம்
ஆம்பூர் வர்த்தக மைய கட்டிடத்தில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை நடத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு நிதி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மைய கட்டடம் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் மானிய உதவியுடன் கட்டப்பட்டதாகும். தற்போது அந்த வர்த்தக மைய வளாகத்தில் பள்ளி வாசல் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தோல் தொழிலை மேம்படுத்துவதற்காகவே மத்திய அரசின் மானிய உதவியை பெற்று கட்டப்பட்ட வர்த்தக மைய வளாகத்தில் பள்ளி வாசல் கட்டப்பட்டு தொழுகை நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் தொழில் வர்த்தக கண்காட்சிகளுக்கு பதிலாக அதிக எண்ணிக்கையில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வர்த்தக மையம் வாடகைக்கு விடப்படுகிறது. பள்ளி வாசல் கட்டப்பட்டு தொழுகை நடத்துவதற்கும், திருமணங்கள் நடத்துவதற்கும் ஆட்சேபனை தெரிவித்து ஆம்பூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், மத்திய தொழில்துறை அமைச்சகம், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, தலைமை செயலாளர், தமிழக காவல் துறை தலைவர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு மனு அனுப்பப்பட்டிருந்தது.
வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
அதன் அடிப்படையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா வர்த்தக மையத்திற்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. புதிதாக வழிபாட்டு தலம் ஏற்படுத்தப்பட்டு, வழிபாடு நடத்துவதற்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதே போல புதிதாக பள்ளி வாசல் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் கட்டட அனுமதி பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டு அனுமதிகளும் பெறாததால் பள்ளி வாசலில் தொழுகை நடத்தக் கூடாது என்று அவர், வர்த்தக மைய நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பள்ளி வாசல் கட்டிடம் கட்டியதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக கட்டிட அனுமதி பெற வேண்டுமென அவர் உத்தரவிட்டார். மேலும் பள்ளி வாசல் இயங்குவதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறும் வரையில் அங்கு தொழுகை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வர்த்தக மைய நிர்வாகம் சார்பாக உறுதிமொழி கடிதம் வருவாய் கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டது.
தொழுகை நிறுத்தம்
அந்த உறுதிமொழி கடிதத்தை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும். வர்த்தக மைய நிர்வாகம் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் கலெக்டர் அனுமதி வழங்கும் வரை அங்கு தொழுகை நடத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின்போது ஆம்பூர் தாசில்தார் பத்மநாபன், மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.