மழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து லேசானமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் கழிவுநீருடன், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இதேபோன்று ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம் மின் மோட்டார், மரம் அறுக்கும் கருவி, கயிறுகள், மணல் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. குடிசை பகுதிகளில் உள்ளவர்கள் அப்பகுதிகளில் உள்ள சமுதாயக்கூடம், அரசு பள்ளிகளில் தங்க வைத்து, மருத்துவம் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைபள்ளிகளுக்கு நேற்று கலெக்டர் அமர்குஷ்வாஹா விடுமுறை அறிவித்தார்.
திருப்பத்தூரில் நேற்று முன் தினம் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மழையளவு
ஆம்பூர்- 12.20, ஆம்பூர் சர்க்கரை ஆலை- 16.20, ஆலங்காயம்- 1.20, வாணியம்பாடி- 5.10, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை- 6.20, திருப்பத்தூர்- 11.30. மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதேபோன்று ஆண்டியப்பனூர் அணையும் நிரம்பி வழிகிறது.