பயிர்களை காத்திட எடுக்க வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள்


பயிர்களை காத்திட எடுக்க வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள்
x

மழையின்போது பயிர்களை காத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை


மழையின்போது பயிர்களை காத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

வடிகால் வசதி

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ெதரிவித்துள்ளதாவது:-

விவசாய நிலங்களில் பயிர்களை காக்க தாழ்வான நிலங்களில் மழை நீர் வெளியேர ஏதுவாக வடிகால் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேலுரமாக தழை சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவை 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும். மேலும், தழை சத்து மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடு காணப்பட்டால், இலை வழியாக தெளிக்கப்பட வேண்டும். பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கத்தை கூர்ந்து கண்காணித்தல் வேண்டும்.

வெள்ள பாதிப்பின்போது நெற்பயிருக்கு வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியபடி கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்:-

நாற்று, நாற்றங்கால் பருவத்தின்போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். நேரடி விதைப்பிற்கு முளைக்கட்டிய விதைகைள விதைக்க வேண்டும். வளர்ச்சி பருவத்தின்போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும்,

நுண்ணூட்ட சத்து

ஒரு சதவீதம் யூரியா கரைசல் (ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 1 கிலோ சிங்க் சல்பேட், 200 லிட்டர் தண்ணீர்) தெளிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரினை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பூக்கும் மற்றும் பால்பிடிக்கும் பருவத்தின்போது கூடுதல் நீரை வடிகட்ட வேண்டும். 2 சதவீதம் டி.ஏ.பி கரைசல் தெளிக்க வேண்டும்/ ஏக்கருக்கு 50 கிலோ அம்மோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறாக முன்னெச்சரிக்கை நடடிவக்கை மேற்கொள்வதோடு மழையினால், சேதாரமான பயிர் குறித்த விவரங்களை அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தெரியபடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story