தூக்குப்போட்டு கர்ப்பிணி மாணவி தற்கொலை
திருவெண்காடு அருகே திருமணத்துக்கு காதலன் குடும்பத்தினர் மறுத்ததால் 3 மாத கர்ப்பிணி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருமணத்துக்கு காதலன் குடும்பத்தினர் மறுத்ததால் 3 மாத கர்ப்பிணி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நர்சிங் மாணவி தற்கொலை
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். இவருடைய மகள் பிரபாவதி (வயது20). இவர் சீர்காழியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். பிரபாவதி நேற்று அதிகாலை தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடிதம் சிக்கியது
இது குறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபாவதி வீட்டில் சோதனை செய்தபோது ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் பிரபாவதி தான் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (26)என்பவரை காதலித்து வந்ததாகவும், தற்போது தான் 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளதாகவும், ஆனந்தராஜ் மற்றும் அவரது சகோதரர்கள் அர்ஜுனன், அலெக்சாண்டர், அண்ணி ரஞ்சனி ஆகியோர் ஆனந்தராஜை திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் நீ செத்து விடு எனக் கூறியதாகவும் கடிதத்தில் பிரபாவதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்சாண்டர்(40), ஆனந்தராஜ், ரஞ்சினி(34) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்கு காதலன் குடும்பத்தினர் மறுத்ததால் கர்ப்பிணி நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவெண்காடு பகுதி மக்களை சோகத்தில் அழ்த்தி உள்ளது.