பேன்சி கடை உரிமையாளர் மிரட்டியதால் கர்ப்பிணி தற்கொலை முயற்சி


பேன்சி கடை உரிமையாளர் மிரட்டியதால் கர்ப்பிணி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே செல்பி எடுத்த புகைப் படத்தை கணவருக்கு அனுப்பி பேன்சி கடை உரிமையாளர் மிரட்டியதால் கர்ப்பிணி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே செல்பி எடுத்த புகைப் படத்தை கணவருக்கு அனுப்பி பேன்சி கடை உரிமையாளர் மிரட்டியதால் கர்ப்பிணி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இளம்பெண்

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜூ(வயது 38). இவர் படந்தாலுமூட்டில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் அதங்கோடு பணகுடிவிளையைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது பிஜூ, அந்த பெண் அருகில் நிற்பது போன்று அவரை மிரட்டி தனது செல்போனில் செல்பி எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

புகைப்படத்தை வைத்து மிரட்டல்

இந்தநிலையில் அந்த இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், பிஜூவின் நடவடிக்கை பிடிக்காததாலும் இனி வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிஜூ, 'நீ வரவில்லை என்றால் என்னிடம் இருக்கும் புகைப்படங்களை உனது கணவரின் செல்போனுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்'. மேலும், வேறு ஒரு செல்போனில் இருந்து அந்த புகைப்படங்களை அந்த இளம் பெண்ணின் கணவர் செல்போனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இதன்காரணமாக இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த இளம்பெண் மாஞ்சாம்குழியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று அங்கு வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் வீட்டில் இருந்த எறும்பு பொடியை (விஷம்) தண்ணீரில் கலக்கி குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பிஜூவை தேடி வருகிறார்.


Next Story