கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x

கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மஞ்சுபிரியா (வயது 28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது. இந்நிலையில் பெற்றோரை இழந்த மஞ்சுபிரியா சமயபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இதைத்தொடர்ந்து இவருக்கும், திருச்சி கள்ளர் தெருவை சேர்ந்த சங்கர்பாபு(50) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு மகன் இருக்கிறான். சங்கர்பாபு திருச்சியில் பை தைக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த மஞ்சுபிரியா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சமயபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மஞ்சுபிரியா தூக்குப்போட்டு கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சுபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மஞ்சுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஞ்சுபிரியாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருச்சி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story