கர்ப்பிணி பெண் `திடீர்' சாவு; உறவினர்கள் சாலைமறியல்


தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி பெண் திடீரென இறந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் இசக்கி துரை. இவருடைய மனைவி சொர்ணம் (வயது 32). இந்த தம்பதிக்கு உமா (9), மகாராஜன் (5) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சொர்ணம் மீண்டும் கர்ப்பம் ஆனார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வயிற்று வலி ஏற்படவே சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மூச்சுத்திணறல் அதிகமானது.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் அங்கு வந்து சொர்ணத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று பிரேத பரிசோதனை தாமதமானதாக கூறியும், டாக்டர்களின் கவனக்குறைவால் சொர்ணம் இறந்து விட்டதாக கூறியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நெல்லை ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பணியில் இருந்த டாக்டர்களும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை நெல்லை அரசு மருத்துவமனையில் நடத்தப்படும் என்று கூறியதையடுத்து சாலைமறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story