கர்ப்பிணி பெண் மர்மச்சாவு


கர்ப்பிணி பெண் மர்மச்சாவு
x

ஆற்காடு அருகே கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். சரக்கு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தமிழரசி (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது தமிழரசி 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழரசி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த கணவவ் ஜானகிராமன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இரண்டு நாட்களாக தமிழரசி தனது தாய் வள்ளியம்மாளிடம் செல்போன் மூலம் பேசாமல் இருந்துள்ளார்.

மர்மச்சாவு

நேற்று காலை வேறு ஒருவருடைய செல்போனில் இருந்து தமிழரசி தனது தாயிடம் விரக்தியில் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வள்ளியம்மாள் பாலுசெட்டி சத்திரம் தாமல் ஊராட்சி தைப்பாக்கம் பகுதியில் இருந்து தனது மகளை பார்க்க தாழனூர் வந்துள்ளார். அவர் வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மகள் தமிழரசி வீட்டின் தரையில் கழுத்தில் புடவை இறுகிய நிலையில் வாய், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 1½ வயது குழந்தை தனது தாயின் மீது அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த வள்ளியம்மாள் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

கொலையா?

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதந்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழரசி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து கணவர் ஜானகிராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story