பரிசோதனைக்காக பரிதவிக்கும் நோயாளிகள்


பரிசோதனைக்காக பரிதவிக்கும் நோயாளிகள்
x
தினத்தந்தி 23 Nov 2022 10:34 PM IST (Updated: 23 Nov 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில், ரத்த பரிசோதனைக்காக நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருப்பதால் கர்ப்பிணிகள் மயங்கி விழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

அரசு ஆஸ்பத்திரிகள்

உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் ஆரோக்கியமான வாழ்வையே விரும்புகின்றனர். நோய் நொடியின்றி வாழ்வதையே சிறந்த வரமாக கருதுகிறார்கள். பண்டைக்காலத்தில் பேய்க்கு பயந்த மனித இனம், இன்றைய காலத்தில் நோய்க்கு பயந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாகி வருகின்றனர். நோய் தாக்குதலால் கூட்டம், கூட்டமாக நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் அடைக்கலம் புகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் ஏழை-எளிய மக்கள் நாடுவது, அரசு ஆஸ்பத்திரிகளை தான்.

பணியாளர்கள் பற்றாக்குறை

அன்றாட சாப்பாட்டுக்கே வழியில்லாத இவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்குவதோடு தங்குவதற்கு இடமும், சாப்பிட உணவும் கொடுத்து அரசு ஆஸ்பத்திரிகள் அரவணைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை கிடைக்கிறதா? என்றால் அது கேள்விக்குறி தான். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் ஒன்று தான், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை.

அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் இல்லை. குறிப்பாக பரிசோதனைக்கூடங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இது, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியிலும் எதிரொலிக்கிறது.

நீண்ட வரிசையில் காத்திருப்பு

ரத்தம், சிறுநீர், சளி பரிசோதனை செய்து அதன் முடிவு உடனடியாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பரிசோதனை கூடத்தின் முன்பு எப்போது பார்த்தாலும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்க்க முடிகிறது. இங்கு உள்நோயாளிகள், புறநோயாளிகள் என தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

தற்போது காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, புறநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

நோயாளிகள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கடந்த ஓராண்டுக்கு முன்பு, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு புதிதாக கட்டிடங்கள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இது, பாராட்ட வேண்டிய விஷயம்.

ஆனால் தினமும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆஸ்பத்திரி நிர்வாகம் போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக ரத்தம், சிறுநீர், சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யும் பணியில் குறைவான பணியாளர்களே ஈடுபட்டுள்ளனர். இதனால் பரிசோதனை செய்வதற்காகவும், அதன் முடிவு குறித்த அறிக்கை வாங்குவதற்காகவும் நீண்ட வரிசையில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் காத்திருப்பது திண்டுக்கல்லில் வாடிக்கையாகி விட்டது.

மயங்கி விழுந்த கர்ப்பிணி

இதேபோல் கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரும் வரிசையில் காத்திருப்பதால் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்த பரிசோதனை அறிக்கை வாங்குவதற்காக, வரிசையில் நின்ற கர்ப்பிணி பெண் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை ஆசுவாசப்படுத்தி, ரத்த பரிசோதனை அறிக்கையை வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை அறிக்கை வாங்குவதற்காக காத்திருந்து நோயாளிகள் மயங்கி விழும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் ஆஸ்பத்திரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் புகார் கூறுகின்றனர்.

சிகிச்சைக்கு தாமதம்

இதேபோல் நோயாளிகள் காத்திருப்பதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வெயிலில் காயும் பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை முடிவு கிடைப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நோயாளிகள் உடனடியாக டாக்டர்களை சந்திக்க முடியவில்லை. பரிசோதனை முடிந்து, டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உள்ளது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக திகழும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உடனுக்குடன் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் கருத்து

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக பரிசோதனைக்கூடங்களை அமைக்க வேண்டும். மேலும் அங்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு ஓரிரு மணி நேரத்துக்குள் கிடைக்க வேண்டும்.

அப்போது தான், அரசு ஆஸ்பத்திரிகள் தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் அய்யமில்லை. இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

சரவணன் (திண்டுக்கல் ஏர்போர்ட் நகர்):- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். தற்போது மழை மற்றும் குளிர்காலமாக இருப்பதால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரு சிலருக்கு 5 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கிறது. அது போன்ற நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்வது அவசியம்.‌ ஆனால் ரத்த பரிசோதனை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லை. இதனால் பரிசோதனைக்கு ரத்தத்தை கொடுப்பதற்கும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதேபோல் பரிசோதனை அறிக்கையை பெறுவதற்கும் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. எனவே ரத்தப் பரிசோதனை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

சங்கீதா (பாலகிருஷ்ணாபுரம்) :- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். தற்போது குளிர்காலமாக இருப்பதால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புடன் நோயாளிகள் அதிக அளவில் வருகின்றனர்.‌ அதேபோல் புதுப்புது வியாதிகள் பரவி வருகின்றன. காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் 3 நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவர்கள் ரத்த பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் தினமும் ஏராளமான நோயாளிகள் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியது உள்ளது ஆனால் ரத்த பரிசோதனை மையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ரத்த பரிசோதனை மையத்தில் தினமும் ஏராளமான நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. முதியவர்கள் மற்றும் கடுமையான நோய் பாதிப்பு உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர்.‌ எனவே ரத்த பரிசோதனை மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story