கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்
கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சமுதாய வளைகாப்பு விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.
கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சமுதாய வளைகாப்பு விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.
சமுதாய வளைகாப்பு
வேலூர் வள்ளலாரில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் கோமதி வரவேற்றார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார்.
விழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலை வகித்து பேசியதாவது:-
வளைகாப்பு என்பது கருவுற்ற பெண்களுக்கு 5 அல்லது 8-வது மாதத்தில் நடத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கும், பெண்ணுக்கும் நாம் அரணாக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி நடத்தப்படுகிறது.
நீங்கள் நல்ல சத்தான உணவினை உட்கொண்டு, ஆரோக்கியமாக இருக்கவேண்டும். பெற்றெடுக்கும் குழந்தைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும்.
இது அரசின் சீரிய திட்டமாகும். பெண்களின் நலனுக்காக கொண்டுவரப்பெற்ற திட்டங்களில் இந்த திட்டமும் ஒன்றாகும். இலவச பஸ் பயணம், மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு திட்டங்கள் பெண்கள் வளர்ச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கண்காட்சி
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்க தானிய வகைகள், மாதுளை போன்ற பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியமும் முக்கியம். என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது குறித்த கண்காட்சி இங்கு இடம்பெற்றுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சியை கலெக்டர், எம்.எல்.ஏ. பார்வையிட்டனர். பின்னர் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை அவர்கள் வழங்கினர். அவர்களுக்கு கதிர்ஆனந்த் எம்.பி. சார்பில் சேலையும், வேட்டியும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் உதவி கலெக்டர் பூங்கொடி, துணை மேயர் சுனில்குமார், வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதாஞானசேகரன், மண்டல குழு தலைவர் நரேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட்ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல வேலூர் அண்ணாசாலையில் உள்ள திருமணமண்டபத்தில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.