குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பிரீபெய்டு ஆட்டோ வசதி ஏற்படுத்த வேண்டும்;மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பிரீபெய்டு ஆட்டோ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பிரீபெய்டு ஆட்டோ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துணை தலைவர் சிவக்குமார், கவுன்சிலர்கள் நீல பெருமாள், ஜான்சிலின் விஜிலா, அம்பிளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஷ் பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருந்து தட்டுப்பாடு இல்லை
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது, "குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளது. நாய் தொல்லை அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி செய்ய வேண்டும். குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. ஏற்கனவே பிரேத பரிசோதனை கூடம் இருந்த நிலையில் தற்போது அங்கு பிரேத பரிசோதனைக் கூடம் செயல்படவில்லை. டாக்டர்கள் சரியாக இருப்பதில்லை" என்றனர்.
அதிகாரிகள் பேசும்போது, "கால்நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு ஏற்கனவே இருந்து வந்த நிலையில் தற்போது அந்த தட்டுப்பாடு சரியாகிவிட்டது. நாய்களை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறையில் திட்டங்கள் எதுவும் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் தான் பிடித்து கருத்தடை செய்கிறார்கள். எங்களது கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மட்டும் செலுத்தப்படுகிறது. குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. குழித்துறை அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.
கழிவுநீர் கலப்பு
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகள் ஊதியத்தை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், தமிழகத்தில் மக்களை பாதிப்படையை செய்யும் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பாசன கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகர்கோவில், குழித்துறை, கன்னியாகுமரி, இரணியல் ரெயில் நிலையங்களில் பிரீ பெய்டு ஆட்டோ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு தமிழ் மொழியில் ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் நவோதய பள்ளிகள் திறக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ்- பா.ஜனதா கவுன்சிலர்கள்
மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை குறித்து விவாதிக்கப்பட்டது போது பா.ஜனதா கவுன்சிலர்கள், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியிடம் அதங்கோடு பகுதியில் உள்ள பள்ளி மாணவன் இறப்பு சம்பவம் குறித்து கேட்டனர். அதற்கு அந்த அதிகாரி, இது போலீசாரின் விசாரணையில் இருந்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து பா.ஜனதா கவுன்சிலர்கள் இந்த சம்பவத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அரசியல் ஆக்கி வருவதாக குற்றச்சாட்டு கூறினர். இதற்கு காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் 2 பேர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதனால் காங்கிரஸ்- பா.ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சிறிது நேரம் காரசார விவாதம் நடந்தது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் குறுக்கிட்டு, மாணவன் இறப்பு சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் இருப்பதால் இதுதொடர்பான விவாதத்தை இருதரப்பினரும் நிறுத்துமாறு கூறி அமைதிப் படுத்தினார்.