வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி:வீடு தேடி வரும் அலுவலருக்கு ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்


வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி:வீடு தேடி வரும் அலுவலருக்கு ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்
x

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வீடு தேடி வரும் அலுவலருக்கு ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்த்து இன்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், பெயர் நீக்கம், வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். எனவே மதுரை மாவட்டத்தில் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story