கோடை சீசனுக்கு நேரு பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரம்


கோடை சீசனுக்கு நேரு பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கோடை சீசனுக்கு நேரு பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் கோடை சீசனுக்கு நேரு பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நேரு பூங்கா

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அழகிய புல்வெளிகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் நூற்றாண்டு பழமை வாய்ந்த கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் உள்ளன. ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், 2 நாட்கள் பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான இந்த கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வார்கள். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனையொட்டி நேரு பூங்காவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தால் நடவு செய்யப்படுவது வழக்கம்.

மலர் நாற்றுகள்

இதற்காக பல்வேறு அரிய வகை மலர் நாற்றுகள் கொள்முதல் செய்யப்பட்டு பூங்காவில் நடவு செய்யபடுகிறது. இந்தநிலையில் பூங்காவிலேயே 2 ஆயிரம் நாற்றுகள் தயார் செய்யும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது பனிப்பொழிவால் நாற்றுகள் வாடிப்போகாமல் இருக்க, பூங்கா ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி நாற்றுகளை பாதுகாத்து வருகின்றனர். மேலும் பூங்காவில் புல்வெளிகளில் அதிகமாக வளர்ந்துள்ள புற்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமப்படுத்தும் பணி, மலர் பாத்திகளில் மலர் நாற்றுகளை நடவு செய்வதற்காக, பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை பூங்காவிற்கு கொண்டு வந்து பாத்திகளில் உள்ள மண்ணுடன் கலந்து தயார் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் பூங்காவில் சுற்றுச்சுவர், கழிப்பிடம், செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும் பூங்கா நுழைவுவாயிலில் டிக்கெட் கவுன்டர் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் மலர் நாற்றுகள் நடவு செய்யபட்டு, வருகிற கோடை சீசனுக்கு பூங்கா மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் இருக்கும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story