பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் தயார்படுத்தும் பணி மும்முரம்
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாலமேடு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முதல் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு கிராமம், கிராமமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி முதலாவது போட்டியாக பொங்கல் அன்று ஜனவரி மாதம் 15-ந்தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பாலமேட்டில் 16-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.இதையடுத்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி மாதம் 17-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆயத்தப்பணிகளை ஊராட்சி, பேரூராட்சி, கிராம பொதுமக்கள், கமிட்டி நிர்வாகிகளும், மாடு வளர்ப்பவர்கள் தொடங்கிவிட்டனர். பாலமேட்டில் வாடிவாசல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மஞ்சள் ஆறு மைதானத்தையும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் தரையை தயார்படுத்தும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது. அதே போல் மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் காளையை சந்திக்க கடுமையான பயிற்சிகளையும் தொடங்கிவிட்டனர். மேலும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் ஆயத்தப்படுத்தும் பணியாக நீச்சல் பயிற்சி, பாரம்பரிய உணவுகள் வழங்குதல், நடைபயிற்சி, மண் குத்தும் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளையும் கொடுக்க தொடங்கிவிட்டனர்.