கொல்லாபுரத்தில் முதல்-அமைச்சர் விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்
கொல்லாபுரத்தில் 5-ந் தேதி நடைபெறும் முதல்-அமைச்சர் விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி வருகிறார். இதையொட்டி, அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், கலெக்டர்கள் ரமண சரஸ்வதி (அரியலூர்), ஸ்ரீவெங்கட பிரியா (பெரம்பலூர்), ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சோ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதேபோன்று முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.
இதையடுத்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி மேற்கொள்ளப்படவுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), மணி (பெரம்பலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.