வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகள் தயார்; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திருச்செந்தூர் கோவிலில் அரசு மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் ரூ.300 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதேபான்று தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். திருப்பதி கோவிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோவிலும் சகல வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்குவதையொட்டி, அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முதியோர் உதவித்தொகை வாங்கியவர்களை பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். ஒரே நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் நீக்கப்பட்டனர். அவர்களில் தகுதியானவர்களைக் கண்டறிந்து மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் புதிய மனு வாங்காமலே மறு ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.