பக்தர்களுக்கு ேதவையான அடிப்படை வசதிகள் தயார் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று ெதாடங்கும் நிலையில் விழாவுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
திருவட்டார்,
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று ெதாடங்கும் நிலையில் விழாவுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
கும்பாபிஷேக விழா
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று கோவில் சபா மண்டபம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தப்பட்டது.
குருத்தோலை தோரணங்கள் கோவில் பிரகாரத்தைச்சுற்றி தொங்க விடப்பட்டுள்ளது. கோவில் முன்புறம் உள்ள அலங்கார விளக்குகள் ஒளிரவிடப்பட்டது.
கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு ஆச்சரியவரணம், வாஸ்து கலச ஹோமம், 6 மணிக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.
இந்தநிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு நேற்று வந்தார். அவரை கோவில் மேலாளர் மோகன்குமார், பொறியாளர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் வரவேற்றனர்.
அடிப்படை வசதிகள்
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கோவிலில் பக்தர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். அவரிடம் பக்தர்கள் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்து கூறினர்.
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கு தேவையான அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம், குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செய்து வருகிறது. குறிப்பாக பக்தர்களுக்கு எவ்வித தடைகளும் ஏற்படாத வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை சீரமைப்புப்பணி, தெருவிளக்கு, குடிநீர்வசதி, பயோ கழிப்பறை, சிறப்பு பஸ் வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புனிதநீர் எடுப்பதற்கான வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவிதாங்கூர் மன்னர் வாரிசு
இந்த கலந்தாய்வில் திருவிதாங்கூர் மன்னர் வாரிசு லெட்சுமிபாய், திருவட்டார் கோவில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு, திருவட்டார் பேரூராட்சிதலைவர் பெனிலா ரமேஷ், துணைத் தலைவர் சுந்தர்ராஜ், இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையர் ஞானசேகரன், திருவட்டார் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜாண்பிரைட் உள்படபலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் அமைச்சருடன் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீஸ் அதிகாரிகள் சிலர் ஆச்சார விதிமுறைகளை மீறி மேல் சட்டையுடன் கருவறை சுற்றம்பலத்திற்கு வந்து சாமி கும்பிட்டதை பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து அமைச்சரிடம் கூறினர். அப்போது அமைச்சர், 'கோவிக்குள் அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் ஆச்சார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.