மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்தபொருட்கள் கண்காட்சி
திண்டுக்கல் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் விற்பனை கண்காட்சியை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
கண்காட்சி
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி திண்டுக்கல் அரசு எம்.வி.எம். பெண்கள் கலைக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகரை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த கண்காட்சியில் கைத்தறி சேலைகள், மெத்தை விரிப்புகள், திரைச்சீலைகள், மிதியடிகள், சுடுமண் பொம்மைகள், கவரிங் பொருட்கள் உள்பட ஏராளமான கைவினை பொருட்கள் உள்ளன. இந்த கண்காட்சியை கலெக்டர் பூங்கொடி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கண்காட்சியை பார்வையிட்டார்.
பொருளாதார தன்னிறைவு
அதையடுத்து கலெக்டர் பூங்கொடி கூறுகையில், பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இதற்காக மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன்உதவி, பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களின் விற்பனை ஊக்கப்படுத்தும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. இதனை பயன்படுத்தி கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அதிக அளவில் வாங்க வேண்டும், என்றார்.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரஇயக்க திட்ட இயக்குனர் சரவணன், கல்லூரி முதல்வர் லட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் வேல்முருகன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.