பள்ளி மாணவன் தயாரித்த பார்வையற்றோருக்கான நவீன மடக்கு குச்சி வழங்கல்
தூத்துக்குடி பள்ளி மாணவன் தயாரித்த பார்வைற்றோருக்கான மடக்கு குச்சிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பள்ளி மாணவன் தயாரித்த பார்வைற்றோருக்கான மடக்கு குச்சிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். கல்விஉதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி மொத்தம் 450 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிவாரண நிதி
தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பாம்பு கடித்து மரணம் அடைந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், நீரில் மூழ்கி மரணம் அடைந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், வீடு இடிந்து விழுந்து இறந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை உள்பட ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
மடக்கு குச்சி
மேலும் இளம் அறிவியல் விருது பெற்ற பாரத ரத்னா காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் ஷகில் இஷாஸ், பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சி உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை 4.4.2022 அன்று மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து பாராட்டு பெற்றார். மாணவரின் திறமையை பாராட்டிய கலெக்டர் செந்தில்ராஜ், பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சி 5 எண்ணம் தயாரிக்கும்படி கூறியதோடு, மாணவருக்கு உதவும்படி துறைசார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார். அதன்படி மாணவர் ஷகில் இஷாஸ் தயாரித்த மடக்கு குச்சிகளை 3 பார்வையற்றோர்களுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார். மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி புதிய வடிவிலான மடக்கு குச்சிகளை தயாரிக்க மாணவனுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபத்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.