சென்னை வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..! முதல்-அமைச்சர் ,கவர்னர் உள்ளிட்டோர் வரவேற்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , கவர்னர் ஆர்.என் . ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்துள்ளார் ..
முன்னதாக , ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரு விமான தளத்துக்கு வந்தார் . பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மசினகுடிக்கு வந்தடைந்தார் .
இதனை தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டினார் .தொடர்ந்து தெப்பக்காடு பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.
தொடர்ந்து ஹெலிகாப்டரில் மைசூரு சென்ற அவர் மைசூர் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் . ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சென்னைக்கு அவர் வருவது முதன்முறையாகும்.
சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , கவர்னர் ஆர்.என் . ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்
நாளை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்புரையாற்றுகிறார்.