நிலக்கரி எடுக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
திருவாரூர், ஏப்.8-
காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
நீர்மோர் பந்தல்
திருவாரூரில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் காமராஜ் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
15 நாட்களில் ரேஷன் கார்டு
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.821 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ரேஷன் கார்டு வினியோகத்தில் எந்த புதிய அணுகுமுறைகள் கொண்டு வந்தாலும், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட முடியும். ரேஷன் கார்டு வினியோகத்தில் சாத்தியம் இல்லாத திட்டங்களை அறிவிப்பதை கைவிட வேண்டும்.
ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் கார்டு வழங்கப்படும் என்ற நடைமுறை ஏற்கனவே உள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றி ரேஷன் கார்டு வழங்கினாலே போதுமானது.
நிலக்கரி எடுக்க அனுமதிக்க கூடாது
தஞ்சை மாவட்டம் வடசேரி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் விடுவதென்றால் அதற்கு ஒரு ஆண்டு முன்னதாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
அவ்வாறு ஓராண்டாக நடந்த நிலக்கரி எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தி.மு.க. அரசுக்கு தெரியாமல் போனது எப்படி? காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அதன் அடிப்படையில் காவிரி டெல்டாவை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிலக்கரி எடுப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மேற்கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.