'லிப்ட்' தருவதுபோல் நடித்து இளம்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச்சென்று தவறாக நடக்க முயற்சி 3 பேர் மீது வழக்கு
கடலூர் அருகே ‘லிப்ட்’ தருவதுபொல் நடித்து இளம்பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்தவர் 34 வயது பெண். சம்பவத்தன்று இவர் பண்ருட்டி ராசாப்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வருவதற்காக அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பெண் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் உங்களை ஊரில் இறக்கி விடுகிறேன் என்று கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து வந்துள்ளார். கடலூர் அடுத்த வாழப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.
செல்போனில் படம் பிடிப்பு
அப்போது அந்த கரும்பு தோப்புக்குள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அங்கு சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும், 3 பேரும் சேர்ந்து தவறாக நடக்க முயன்று, அதை செல்போனில் படம் பிடித்து உள்ளனர். உடனே அந்த பெண் சத்தம் போடவே அவர்கள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் இதுகுறித்து அந்த பெண் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் செல்போனில் படம் பிடித்ததாக ராசாப்பாளையத்தை சேர்ந்த விக்கி, அண்ணாநகரை சேர்ந்த வேலு உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.