தக்காளி விலை கடும் வீழ்ச்சி
பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டுக்கு பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் பருவமழை பொழிவினால் தக்காளி விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
மார்க்கெட்டுக்கு தினமும் 100 டன்னில் இருந்து 500 டன் அளவிற்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் இல்லாததாலும், வரத்து குறைந்துள்ளதாலும் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
விவசாயிகள் கவலை
பாலக்கோடு மார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்ததால் நேற்று தக்காளி ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது. தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விலை வீழ்ச்சியடையும் காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டு பொருளாக்கி விற்பனை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.