உளுந்து-பச்சைப்பயறு நேரடி கொள்முதலுக்கு விலை நிர்ணயம்
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின்கீழ் உளுந்து, பச்சைப்பயறு நேரடி கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின்கீழ் உளுந்து, பச்சைப்பயறு நேரடி கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் விற்பனை-வேளாண் வணிகத்துறை நாகப்பட்டினம் விற்பனை குழு செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உளுந்து- பச்சைப்பயறு
நாகை மாவட்டம் திருப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடம் சின்னதும்பூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையம் அருகே உள்ளது.
இங்கு மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் ஆகியோரின் பரிந்துரையின்படி 2023-ம் ஆண்டில் உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காக உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.66 என்றும், பச்சைப்பயறு கிலோ ரூ.77.55 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொருளீட்டுக்கடன்
திருக்குவளை, கீழ்வேளூர் வட்டார விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, சிட்டா அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் சென்று விற்பனை கூடத்தில் பதிவு செய்து உளுந்து, பச்சைப்பயறை விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு அறுவடை காலங்களில் விலை வீழ்ச்சி ஏற்படும்.
அந்த விலை வீழ்ச்சி காலங்களில் குடோனில் விளைபொருட்களை இருப்பு வைத்து சிறு விவசாயிகள் 75 சதவீதமும், பெரிய விவசாயிகள் 50 சதவீதமும் பொருளீட்டுக்கடனாக பெறலாம். அந்த தொகைக்கு 5 சதவீத வட்டி வசூல் செய்யப்படுகிறது.
180 நாட்கள் இருப்பு வைத்துக் கொள்ளலாம். சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடனாக பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.