ஈரோட்டில் அதிரடியாக ஏறும் விலை: தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை


ஈரோட்டில் அதிரடியாக ஏறும் விலை: தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை
x

ஈரோட்டில் அதிரடியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனையானது. காய்கறி வாங்க பொதுமக்கள் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் அதிரடியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனையானது. காய்கறி வாங்க பொதுமக்கள் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

தக்காளி விலை

நாடு முழுவதும் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டி உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் தக்காளி விலை பொதுமக்களை கடுமையாக பாதித்து வருகிறது. தக்காளி விலை உயர்வை கிண்டல் செய்யும் வகையில் வீீடியோக்கள், மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. தமிழ்நாடு அரசு சென்னையில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது. இந்த சூழலில் தினமும் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஈரோட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி அதிக பட்சம் ரூ.130-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.120-க்கு விற்பனையான தக்காளி ஒரே நாளில் ரூ.10 உயர்ந்து இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வரத்து குறைந்தது

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டுக்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தலா 10 ஆயிரம் பெட்டி தக்காளி கொண்டு வரப்படும். இதுதவிர ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளும் உழவர் சந்தைகள் மூலம் தக்காளி விற்பனை செய்வார்கள். ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி வரத்து குறையத்தொடங்கியது.

800 பெட்டிகள்

இந்த நிலையில் ஈரோடு மார்க்கெட்டுக்கு நேற்று வெறும் 800 பெட்டி தக்காளி மட்டுமே குறைந்தது. இதனால் விலை கடுமையாக உயர்ந்தது. இதன்படி மொத்த விற்பனை விலை ஒரு கிலோவுக்கு ரூ.100-ஐ தாண்டி நேற்று விற்கப்பட்டதால், சில்லரை விலையில் கிலோ ரூ.130 வரை தக்காளி விற்பனையானது.

தக்காளி விலையை போன்று பிற காய்கறி வகைகளும் விலை உயர்ந்து உள்ளன. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்செட் நேற்று வெறிச்சோடியது. பொதுமக்கள் வராததால் வியாபாரிகள் கடைகளிலேயே படுத்து ஓய்வு எடுத்ததை காணமுடிந்தது.


Related Tags :
Next Story