நீலகிரி காய்கறிகள் விலை வீழ்ச்சி


நீலகிரி காய்கறிகள் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி,

வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கொள்முதல் விலை

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால், விவசாயிகள் தங்களது விளைநிலங்களை தரிசாக வைத்திருந்து, ஜனவரி மாதம் முதல் விவசாயத்தை தொடங்குவது வழக்கம்.

ஆனால், நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களாக கோத்தகிரி பகுதியில் உறைப்பனியின் தாக்கம் இல்லாததாலும், போதுமான மழை பெய்ததாலும் தங்களது தோட்டங்களில் தொடர்ந்து மலை காய்கறிகளை பயிரிட்டு வந்தனர். மேலும் காய்கறிகளுக்கு போதுமான கொள்முதல் விலையும் கிடைத்து வந்தது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கடந்த மாதம் கேரட், பீட்ரூட் கிலோவுக்கு சராசரியாக ரூ.40 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

வரத்து அதிகரிப்பு

ஆனால், தற்போது நல்ல தரமான கேரட் கிலோவுக்கு ரூ.25, பீட்ரூட் ரூ.25 முதல் ரூ.30, முட்டைகோஸ் ரூ.5 கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு காய்கறிகளுக்காக செலவழித்த அசல் தொகை கூட கிடைக்காமல், நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் கவலையடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, காய்கறிகளின் விதைகள், இடு பொருட்கள் உரம் ஆகியவற்றின் விலை மற்றும் தொழிலாளர் கூலி உயர்ந்து உள்ளது. இதனால் வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். இந்தநிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.


Next Story