கோவில் நகைகளை திருடிய பூசாரி கைது
வடமதுரை அருகே கோவில் நகைகளை திருடிய பூசாரி கைது செய்யப்பட்டார்.
வடமதுரை அருகே பெரியகோட்டை குரும்பப்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்த செல்வகுமார் (வயது 41) என்பவர் பூசாரியாக இருந்து வந்தார். கோவிலில் உள்ள அம்மன் நகைகள், உண்டியல் பணத்தை கோவிலுக்குள் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி சாவியை செல்வகுமாரிடம் கொடுப்பது வழக்கம். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி கோவில் நிர்வாகிகள் வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது லாக்கரில் இருந்த 10 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வகுமாரிடம் விசாரணை செய்தபோது, அவர் கோவில் நகைகளை திருடி அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகி முனியப்பன், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வகுமார் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது