சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரிக்கு தர்ம அடி
சிறுபாக்கம் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோவில் பூசாரிக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சிறுபாக்கம்
10 வயது சிறுமி
கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது பள்ளிக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுமி, கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு வந்தாள்.
சம்பவத்தன்று அவள், தனது பாட்டியுடன் ஆடு மேய்க்க சென்றாள். அப்போது அங்கு வந்த மங்களூரை சேர்ந்த கோவில் பூசாரி ராமலிங்கம்(வயது 48) என்பவர், தனியாக நின்ற சிறுமியிடம் உனது பாட்டிக்கு வெற்றிலை, பாக்கு வாங்கி வரலாம் வா என்று கூறி அவளை மோட்டார் சைக்கிளில் கடைக்கு அழைத்து சென்றார்.
பாலியல் பலாத்காரம்
அங்கு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்த பின்னர் அருகில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை ராமலிங்கம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது பாட்டி மற்றும் தாயிடம் கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ராமலிங்கத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.