ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்த பாதிரியார் சாவு
திருமங்கலத்தில் ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்த பாதிரியார் பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அமல அன்னை ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் (வயது 64). இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள அழகப்பபுரம்.
இந்த நிலையில் ஜெகதீஷ், கன்னியாகுமரி சென்றுவிட்டு, நேற்று முன்தினம் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு, விருதுநகரை தாண்டி அடுத்த நிறுத்தம் மதுரை தான். இந்த நிலையில் திருமங்கலம் வழியாக வந்த இன்டர்சிட்டி ரெயில் முதல் பிளாட்பாரம் வழியாக சென்ற போது சற்று வேகம் குறைவாக சென்றது. இதனால் பாதிரியார் ஜெகதீஷ் ெரயில் மெதுவாக செல்வதால் இங்கேயே இறங்கி விடலாம் என நினைத்து தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் படிக்கட்டில் பின்பக்கமாக திரும்பி இறங்க முற்பட்டார்.
ரெயில்வே நடைமேடை மிகவும் தாழ்வாக இருந்ததால் கீழே இறங்க முயன்ற போது நிலை தடுமாறி ரெயிலுக்கு அடியில் விழுந்தவர் கால் படியில் சிக்கிக் கொண்டது. இதனால் சுமார் 20 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு கீழே விழுந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக அவரை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த பாதிரியாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.