ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்-சமயபுரத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்-சமயபுரத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்
ஸ்ரீரங்கம், ஆக.23-
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மற்றும் சமயபுரம் கோவிலில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளியையும் நேற்று தொடங்கி வைத்து மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் மாரிமுத்து ஆகியோர் அர்ச்சகர் பள்ளி ஆசிரியருக்கான ஆணையை ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டரிடம் வழங்கினர். பின்னர் அர்ச்சக பள்ளியில் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 30 மாணவர்களுக்கும் சேர்க்கைக்கான ஆணையை வழங்கினர். இதனை தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.